Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : மதுரை தமிழிசை சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் 120வது சர் ராஜா முத்தையா செட்டியார் பிறந்தநாள் விழா மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு, 'தமிழ் பெரும் கவி' என்ற பட்டம் தமிழ் இசை சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை பெற்ற பிறகு வைரமுத்து பேசுகையில், ''கவியரசு கண்ணதாசன் மறைந்த பின்னரே எனக்கு கவியரசு பட்டம் சூட்டினார்கள். முன்னதாக பட்டம் எனக்கு வழங்கக் கூடாது என்று சர்ச்சை கிளம்பியது.
வைரமுத்து கருப்பன், ஏர்பிடிக்கும் உழவர் கூட்டத்தில் இருந்து வந்தவன் என்பதால் எனக்கு விருதுகள் வழங்குவதில் அதிக சர்ச்சை ஏற்படுகிறது. ஆனால் மறுதலிப்பதால் அதிகம் பெறுவார் என்பதற்கு இணங்க பல பேரறிஞர்கள் உடன் இருந்த அவையில் கலைஞர் கருணாநிதி எனக்கு 'கவிப்பேரரசு' என்று பட்டம் சூட்டி கௌரவித்தார்.
'முத்தமிழ் பேரறிஞர்' என்ற பட்டம் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொடுக்கப்பட்டலும், எனக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டேன். அவர் என்னை நெறிப்படுத்தினார். 1,000 பேர் கொண்ட இடத்தில் 996 தோற்று போனோர் சமூகத்தில் இருந்து 4 பேர் வெற்றி பெற்று முன்னேற முயற்சிதால் அவர்கள் மீது புறம் பேசி வருகின்றனர். பட்டம் வாங்குவது எளிது; அதனை அனுபவிப்பது சிரமம்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் குடும்பத்தார்கள் மீதும் அவதூறு பரப்பி வெற்றியாளர்களை இழிவுபடுத்தி வருவதை நிறுத்திவிட்டு, தமிழ் சமூகம் வெற்றியாளர்களுக்கு தோல் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர்களை வெற்றி கண்ட பின்னரே தமிழ் இசை மீண்டு வந்தது. தமிழிசை வீழ்ந்தும், மலர்ந்தும் பல நூற்றாண்டுகளாக கடந்து வருகிறது.
எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது.
சங்கீதத்தை ரசிப்பதற்கு பொருளாதாரம் வேண்டும். என் கவிதைகளை அறிய தமிழ் அறிவு வேண்டும். திருமணத்திற்கு முன் பரதநாட்டியம் கற்று கொண்ட பெண், மனவாழ்க்கையில் நேர்த்தியாக உடை உடுத்துவது முதல் வீட்டை தூய்மையாக வைத்து கொள்வாள். கலைகள் வாழ்க்கையை நெறிப்படுத்துவதுடன் கட்டுப்பாடுகளையும் வளர்கிறது.
வயநாட்டில் உயிரிழந்த உயிர்களுக்கும், வங்கதேச உள்நாட்டு கிளர்ச்சி உள்ளிட்ட பல சம்பவங்களை வெளிப்பாடாக பரதநாட்டியத்தில் அபிநயா பிடித்து உலகம் முழுவதும் பறைசாற்றும் வல்லமை கொண்டது. 44 ஆண்டுகளாக திரைப்பட பாடலில் தமிழ் இலக்கியம் சார்ந்த பாடல்களை இடம்பெற செய்ய முயல்கிறோம்.
நான் கம்பனிடம் களவாடுவேன்; கண்ணதாசனிடம் கொள்ளை அடிப்பேன். ஏனென்றால் பாட்டன் சொத்து பேரன் வைரமுத்துவுக்கு தான். திரைப்படத்தில் நல்ல பாடல்கள் இல்லை என்று சொல்லலுங்கள், ஆனால் நல்வைகளே இல்லை என்று மறந்து விடக்கூடாது. சொற்களை அதிகம் செலவு செய்யாதீர்கள், மின்சாரத்தை விட மொழியே அதிகம் பயன்படுத்துகிறோம்.
இந்த நிலையில் தமிழுக்கு வரி செலுத்த வேண்டும் என்றால் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். முத்தமிழ் பேரறிஞர் என்பதில் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் தொடர்பு கொண்டது என்பதால், பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் 'முத்தமிழ் பெரும் கவி' என்ற பட்டத்தை கேட்டு பெற்று கொண்டுள்ளேன்'' என்று வைரமுத்து பேசினார்.
இந்நிலையில், 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' பட்டம் பெற்றது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட வைரமுத்து, ''பொன்விழாக் காணும்
மதுரைத் தமிழ் இசைச் சங்கம்
'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்'
என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது
அமைச்சர் தங்கம் தென்னரசு
பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார்
தமிழ் இசைச் சங்கத் தலைவர்
ஏ.சி.முத்தையா,
திருமதி தேவகி முத்தையா,
பொற்கிழி பெற்ற விசாகா ஹரி,
மற்றும் அறங்காவலர்கள்
உடனிருந்தனர்
தமிழ் இசையை மீட்டுக்கொடுத்த
செட்டி நாட்டரசர் பாரம்பரியத்தைப்
போற்றிச் சொன்னேன்
இந்த விருதுக்கு என்னைத்
தகுதிப்படுத்திக் கொள்வேன் என்று
தலை வணங்கினேன்
அவைநிறைத்த பெருமக்காள்!
அன்பு நன்றி'' என்று கூறியுள்ளார்.