நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப நாட்களாக தந்தை பெரியார் குறித்து கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி வருவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிற இயக்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் 70-ற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ற போதும், பெரியார் குறித்து சீமான் பேசுவது தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தற்போது பெரிய அளவில் எதிர்வினை ஆற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் குமரன் உட்பட இருவர் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை கண்காணித்து அதன்படி தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், அங்கிருந்து ஒன்று திரண்டு சென்று சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி குமரனும், சுரேஷ் என்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த இருவரும் வாகனத்தை தணிக்கையில் திருவான்மியூர் அருகே சிக்கி உள்ளனர். அவர்களிடம் பெட்ரோல் குண்டு இருந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் உள்ள தனியார் விடுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் பதுங்கி இருந்ததும் அவர்களுடன் ஒன்று திரண்டு சென்று சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ராயப்பேட்டை விரைந்த போலீசார் தனியார் விடுதியில் வைத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து அந்த விடுதியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து மூன்று பெட்ரோல் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.