தமிழ்நாடு

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி
school student gives 32 pounds of jewelry to her Instagram boyfriends
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது 14 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த சுமார் 32 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போனதாக அந்த அதிகாரி கூடங்குளும் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது வீட்டில் திருடர்கள் யாரும் வந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். திருடர்கள் குறித்து துப்பு துலங்காத நிலையில் வீட்டில் உள்ளவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் வீட்டில் இருந்த அனைவரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

7 மாதத்தில் 32 பவுன் நகை:

அதிகாரியின் 14 வயது மகள் இன்ஸ்டாகிராம் மூலம் இரண்டு இளைஞர்களிடம் பழகி வந்த நிலையில் நகையை அவர்களிடம் எடுத்துக் கொடுத்துள்ளார் என்கிற பகீர் தகவல் தெரிய வந்தது. அதிகாரியின் மகள் இன்ஸ்டாவில் வெகு நேரம் செலவிடும் நபராக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக திருச்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 22), முகமது சுகி ( 22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் நட்பாக பழகி உள்ளனர். அடிக்கடி இருவரும் கூடங்குளம் வந்து சென்றதாகவும் தெரிகிறது. அப்போது மாணவியிடம் தங்களுக்கு அவசர தேவை உள்ளதாக கூறி பணம் அல்லது நகையை கேட்டுள்ளனர். ஓரிரு மாதங்களில் நகைகளை திரும்பி தந்து விடுவதாக கூறியுள்ளனர். நெருங்கி பழகிய நண்பர்கள் கேட்டதால் அந்த மாணவி அவ்வப்போது தனது வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து கொடுத்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை எடுத்து கொடுத்து வந்த நிலையில் மொத்தமாக 32 பவுன் தங்க நகைகளை இருவரிடமும் கடந்த ஏழு மாதத்தில் மாணவி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுப்பதற்காக அதிகாரி பீரோவை திறந்த போது அதில் நகைகளை காணவில்லை. இதனைத் தொடர்ந்து தான் அந்த அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சொகுசு வாழ்கை வாழ்ந்த நண்பர்கள்:

விசாரணையில் அதிகாரியின் மகளே குடும்பத்தினருக்கு தெரியாமல் நகைகளை தனது ஆண் நண்பர்களுக்கு எடுத்து கொடுத்தது தெரிய வந்த நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். போலீசார் திருச்சியில் இருந்த முகமது சுகி, அப்துல் ரகுமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நகை குறித்து விசாரித்த போது வாலிபர்கள் 2 பேரும் அந்த நகைகள் அனைத்தையும் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. 14 வயதே நிரம்பிய மாணவி ஆண் நண்பர்களின் ஆசை வார்த்தையை நம்பி சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.