தமிழ்நாடு

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னையும் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. 2015ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் சென்னை மாவட்டம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளிலும், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

உணவு, பால் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு பல இடங்களில் மின்சாரம் இன்று மக்கள் பாதிக்கப்பட்டனர். உணவுக்காகவும், பாலுக்காகவும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிய நிகழ்வுகளை யாராலும் மறக்க முடியாது. 2023-ல் டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது முறையே நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) அதிகனமழை பெய்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கடந்த ஆண்டு புறநகர்களை விட மாநகருக்குள் மழை அதிகமாகப் பெய்துள்ளது. 

மேலும் படிக்க: தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

இந்நிலையில் அடுத்த மாதம் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மெற்கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். இதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. வானிலை முன்னறிவிப்புகளை அறிந்துகொள்ள TN ALERT என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்பதை நோக்கமாகக் கோண்டு செயல்பட வேண்டும். பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்து திருதப்படுத்த வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.