சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 தினங்களாக சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். தீபாவளிக்கு மறுநாள் அக்.1ம் தேதியும் பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து வார விடுமுறையும் சேர்ந்து வருவதால், சென்னைவாசிகள் அவர்களது சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 3 தினங்களாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மூலம் மட்டும் 5.76 லட்சம் மக்கள் பயணித்துள்ளதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், தனியார் பேருந்துகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், பேருந்தில் ஏறியும் ஆய்வு செய்தார்.
நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 2,172 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 தினங்களில் 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், ரயில்கள், சிறப்புப் ரயில்கள் மூலமும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். பேருந்து, ரயில்கள் மட்டுமின்றி கார், வேன், இருசக்கர வாகனங்களிலும் மக்கள் குடும்பத்துடன் ஒரேநேரத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதன்படி ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநேரம் கோயில்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையரங்குகளுக்குச் செல்லவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், தீபாவளி பட்டாசு காரணமாக சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. ஆலந்தூர், அரும்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அதிகம் பாதிப்பு இருப்பதாகவும், மற்ற இடங்களில் மிதமான மாசு என்ற நிலையிலும் காற்று தரக் குறியீடு உள்ளது.