Heavy Rain Warning in Tamil Nadu : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், ஜூலையில் இருந்து மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை (ஆக.18) நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாமில் 6 செ.மீ., மழையும்; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 5 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பெருமழை, அதனால் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்க, வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கனமழை, மிக கனமழைக்கு முன்னதாகவே தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகங்களையும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இரவு நேரங்களில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னைவாசிகள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மேலும் படிக்க - சென்னை பீச் – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து
ஆனால், இந்த வாரம் தொடக்கம் முதலே சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், தாம்பரம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.