தமிழ்நாடு

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்
கோப்பு படம்

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, விசாரணைக் கைதியாக புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ரூதின் சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா,  சிறை அறையில் உள்ள கேமராக்களை ஆஃப் செய்து விட்டு, போலீஸ் பக்ரூதினை கடுமையாக தாக்கியதாகவும், புழல் சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் மூடப்பட்டதை எதிர்த்து  வழக்கு தொடர்ந்ததற்காக அவர் தற்போது பழிவாங்கப்படுவதாக கூறினார். 

சிறை நிர்வாகம் சார்பில், போலீஸ் பக்ரூதின் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை எனவும் அவருக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார். இதனையடுத்து, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளே தவறிழைப்பவர்களாக மாறி விடக்கூடாது என தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளியாக இருந்தாலும் கூட அவர்களை மனித தன்மையுடன் நடத்த வேண்டுமென அறிவுறுத்தினர். 

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இரும்பை முதன்முதலாக பயன்படுத்தி இரும்பு காலத்தின்  முன்னோடி  என்று பெருமைப்படும் நேரத்தில்,  ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து  உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு போலீஸ் பக்ரூதினை காணொலி மூலம் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேற்று, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டார். 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

புனே நகரிலுள்ள பீர்பால் சகானிதொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப்பகுப்பாய்வும் ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இத்ததைய மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன. உலக அளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறுவோம். தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக அறிவித்தேன் என்று கூறினார்.