தமிழ்நாடு

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க டிஜிபிக்கு கடிதம்: பின்னணியை உடைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட்!

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க டிஜிபிக்கு கடிதம்: பின்னணியை உடைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட்!
Retired DGP Jangid
அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

குற்றவாளிகள் கைது மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள்

ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் அளித்த பேட்டியில், பவாரியா கொள்ளையர்கள் மொத்தம் 15 பேர் என்றும், அதில் 13 கொள்ளையர்களைக் கைது செய்ததாகவும், 2 பேர் என்கவுன்டரில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். கொள்ளையர்களுக்கு உதவி செய்தவர்களையும் கைது செய்ததாக அவர் கூறினார். இதுவரை 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கில் தற்போது 3 பேர் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "இன்னும் 19 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும் என்று தற்போதைய டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்த வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றினால் சரியாக இருக்கும். 20 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. வாய்தா வாங்கிச் சென்றதால் காலதாமதமானது" என்றார்.

'காணாமல் போன ஆவணங்கள்'

மேலும், "எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் சில ஆவணங்கள் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டபிறகே டிஜிபிக்குக் கடிதம் எழுதினேன். இதுபோல ஆவணங்கள் எதுவும் காணாமல் போக விடக்கூடாது. தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகளை நிகழ்த்தியது பவாரியா கொள்ளையர்கள் தான் என்பதனை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தினோம். ஷூ, ஆயுதங்கள், கைரேகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தோம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே தமிழக காவல்துறை சிறப்பான விசாரணை நடத்தி, "கடலில் விழுந்த ஊசியை தேடுவது போல" தேடி பவாரியா கொள்ளையர்களைப் பிடித்தோம்" என தெரிவித்தார்.

கோரிக்கையை நிராகரித்த 'டிஜிபி'

"இந்தக் கடிதம் எழுத ஒரு காரணமும் இருக்கிறது. இந்தக் காரணத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய டிஜிபியை (ராமானுஜம்) நேரில் சந்தித்தேன். அவரிடம் தலைமறைவாக உள்ள பவாரியா கொள்ளையர்களைப் பிடித்துவருவதற்காகத் தனிப்படைகள் தரும்படி கேட்டேன். என்னுடைய கோரிக்கையை டிஜிபி நிராகரித்து விட்டார். அதற்கு காரணம் அதிகாரிகள் மத்தியில் நிகழ்ந்த அரசியலே. இந்தக் தகவல் முதல்வர் வரை செல்லவில்லை. எல்லா வழக்கும் முக்கிய வழக்குகள் தான்" என்றார்.

காவல்துறைக்கான அறிவுரை

மேலும் அவர், "2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்திற்குள் பவாரியா கொள்ளையர்கள் வரவில்லை. பயத்தில் இருப்பதால் வர மாட்டார்கள். அந்த அளவுக்குப் பயத்தோடு நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் நடந்த சில குற்றங்கள் பவாரியா கொள்ளையர்கள் செய்ததாகப் பரவலாகச் சொல்லப்படும், ஆனால் அவை பவாரியா கொள்ளைகள் இல்லை.

தலைமறைவாக உள்ள பவாரியா கொள்ளையர்களைக் கண்டிப்பாகக் கைது செய்ய வேண்டும்; அவர்களை விடக்கூடாது. பவாரியா கொள்ளையர்களுக்கு வயதானாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். தமிழக காவல்துறை அவர்களைக் கைது செய்வார்கள் என நம்புகிறேன். இளம் காவல்துறையினர் இதுபோல கொடூர கொள்ளையர்களைப் பிடிக்கச் செல்லும் போது மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். வடமாநிலத்திற்குக் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் போது டிஎஸ்பி, எஸ்பி தலைமையில் தான் தனிப்படை செல்ல வேண்டும். அங்குச் செல்லும் போது உள்ளூர் போலீசாரின் உதவியைப் பெற வேண்டும்.

'மன நிம்மதி இருக்கிறது'

குற்றவாளிகளைக் கைது செய்வது நமது கடமை. கொடூரமான பவாரியா கொள்ளையர்களை திறமையாக செயல்பட்டு கைது செய்தது தொடர்பாக எந்தப் பாராட்டும், விருதுகளும் எனக்கோ என்னுடைய தனிப்படையினருக்கோ வழங்கப்படவில்லை. ஆனால், அதில் எந்த வருத்தமும் இல்லை. நமது கடமையைச் சிறப்பாகச் செய்து விட்டோம் என்ற மன நிம்மதி இருக்கிறது" என்று ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் தெரிவித்தார்.