தமிழ்நாடு

கரூர் சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த எஸ்ஐடி!

கரூர் சம்பவம் தொடர்புடைய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது.

கரூர் சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த எஸ்ஐடி!
SIT hands over documents to CBI officials
கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கரூரில் விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 13-ஆம் தேதி இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சி.பி.ஐ. குழு வருகை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார் மற்றும் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று கரூர் வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இதுவரை மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அடுத்து கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டால்தான் உண்மைகள் வெளிவரும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.