தமிழ்நாடு

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ED விசாரணையில் தகவல்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் "டாஸ்மாக் பார் டெண்டர்" விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே நபர், பல நபர்களின் GST நம்பர்களில், பல DD-(Demand Draft) எடுத்து பார்களை டெண்டர் எடுத்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்களில் 30-40 சதவீதத்திற்கும் மேல் இதேபோன்று முறைகேடு செய்யப்பட்டு டெண்டர் எடுத்துள்ளது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பார்களை டெண்டர் எடுத்த ஒரே நபர், அதனை அரசுக்கு தெரியாமல் பல நபர்களுக்கு சப்-காண்ட்ராக்ட் விட்டிருப்பதும், அதன் மூலம் மதுபான வகைகளை அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, பார் அமைப்பதற்கு டாஸ்மாக் அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர்களிடம் NOC வாங்குவதிலும் முறைகேடு செய்யப்பட்டு டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் லைசன்ஸ் இல்லாத பார்கள் செயல்பட்டு வருவதும், அந்த பார்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து மது விற்பனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் லைசென்ஸ் இல்லாத பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர் ஜோதி சங்கர், மேலாளர் சங்கீதா உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்களிடம் 13 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் குறித்த விவரங்களை நான்கு தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு பிறகு தற்போது வரை 33 நபர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக, பார் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், டெண்டருக்காக DD எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நம்பர் உரிமையாளர்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்மன் அளிக்கப்பட்ட நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் டாஸ்மாக் முறைகேடு மட்டுமல்லாமல் டாஸ்மாக்கை மையமாக வைத்து நடந்த "பார் டெண்டர் முறைகேடும்" மிகப்பெரிய அளவில் வெளிவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.