தமிழ்நாடு

நெருங்கும் ரம்ஜான்.. களையிழந்த கால்நடை சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நெருங்கும் ரம்ஜான்.. களையிழந்த கால்நடை சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் நிலையில், தற்போது 300 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் வியாபாரம் மந்தமாகவே இருந்தது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாகும். வாரம் தோறும் வியாழக்கிழமை ஆடு,மாடு மற்றும் கோழி விற்பனை நடைபெறுகிறது. இந்த சந்தையில் கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வாடிக்கை.

ஏமாற்றத்தோடு திரும்பிய வியாபாரிகள்:

இன்னும் சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எண்ணி கால்நடை வியாபாரிகள் அதிகமானோர் வந்திருந்தனர். ஆனால் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. எப்போதும் பண்டிகை சமயங்களில் ஆயிரக்கணக்கான வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், இன்று சந்தைக்கு மொத்தமே 300 ஆடுகள் தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6000 முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

வழக்கமாக இந்த சந்தைக்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடு மற்றும் கோழிகளை வாங்கிச் செல்வர். ஆனால் இன்று நடைபெற்ற சந்தையில் போதுமான அளவு ஆடுகள் விற்பனைக்கு வராததால் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த கால்நடை விவசாயிகளும், வாங்க வந்த வியாபாரிகளும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஆடுகள் வரத்து குறைவாக இருந்த போதிலும் ரூபாய் 30 லட்சம் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.