தமிழ்நாடு

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்
சுதந்திர தின விழாவையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
இந்தியாவின் 79-வது சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் முக்கியமான ரயில், பஸ்நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

7 அடுக்கு பாதுகாப்பு

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும் உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தீவிர பாதுகாப்பு பணிகளில் உள்ளனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களைப் பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்திச் சந்தேகப்படும் வாகனங்களைப் பாதுகாப்பு படையினா் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிடுகின்றனா்.அதேப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதனை செய்து வருகின்றனா்.

வண்ண விளக்குகளால் அலங்காரம்

அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் தேசியக்கொடி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளும் சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளும் இந்த வண்ண விளக்குகளைப் பார்த்து மகிழ்ச்சியடைக்கின்றார்கள். வண்ண விளக்குகளால் மிளிர்வதைப் பார்க்கும் பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.