தமிழ்நாடு

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ChennaI Highcourt
கரூர் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் அரசு நடவடிக்கை

கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, ரோடு ஷோக்கள் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரித் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அ.தி.மு.க. மற்றும் த.வெ.க.வின் ஆட்சேபனை

இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மீது அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தன. அதில், அரசு விதித்துள்ள நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் ஜனநாயகத்திற்கு விரோதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

இந்நிலையில், இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

* அரசியல் கட்சிகள் கூறியுள்ள ஆலோசனைகளைப் பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

* மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவற்றைக் குறிப்பிட்டுத் தனி வழக்குகளைத் தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.