தமிழ்நாடு

‘குட் பேட் அக்லி’யால் பிரச்னை...திரையரங்க பவுன்சருக்கு கத்திக்குத்து- திமுக கவுன்சிலர் மீது வழக்கு

விருதுநகரில் குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்க்க வந்தபோது ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியார் திரையரங்கு பவுன்சருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

 ‘குட் பேட் அக்லி’யால் பிரச்னை...திரையரங்க பவுன்சருக்கு கத்திக்குத்து- திமுக கவுன்சிலர் மீது வழக்கு
திரையரங்க பவுன்சருக்கு கத்திக்குத்து

விருதுநகரில் ராஜலட்சுமி தியேட்டரில் நேற்று அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை காண வந்த அஜித் ரசிகர்களுக்கும், தியேட்டர் பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்பட்டது. மேலும் திரையரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது படியின் இருந்து கீழே விழுந்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பணி முடித்து திரையரங்கு பவுன்சர் விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்த தனுஷ் குமார்(25), அவரது சித்தப்பா காளையப்பாண்டி உடன் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் காபி கடையில் நின்று கொண்டிருந்தபோது, விருதுநகர் நகராட்சி திமுக கவுன்சிலர் மணிமாறன் அவர்களது நண்பர்களான சக்தி ( எ) ஜில் சக்தி, சக்தி சகோதரர் தாஸ், யானைக்க்குழாய் தெருவை சேர்ந்த பாலாஜி, தல தினேஷ், சந்தோஷ் மற்றும் 3 பேர் சேர்ந்து பவுன்சர் தனுஷ் குமாரை சரமாரியாக தாக்கினர்.

போலீஸ் விசாரணை

இதில் பவுன்சர் தனுஷ் குமாரை தாஸ் மற்றும் பாலாஜி ஆகியோர் கூர்மையான கத்தியால் தலை மற்றும் மார்பில் குத்தி காயம் ஏற்படுத்தினர். படுகாயம் அடைந்த பவுன்சர் தினேஷ் குமார் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து பவுன்சர் தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் மணிமாறன் உட்பட தாக்குதல் நடத்திய ஒன்பது பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.