தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
Gold Price
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், இன்று (அக். 13) வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.92,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதே வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

தங்கம் விலையின் புதிய உச்சம்

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு நாளுக்கு இருமுறை விலை மாற்றத்தை சந்தித்தது.

நேற்று முன்தினம் (அக். 11), காலையில் கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்திருந்தது. அதேபோல், பிற்பகலில் கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் அதிகரித்தது. ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.92,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையைக் காட்டிலும், வெள்ளி விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.