அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை மேற்கொண்டு அவரது செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஞானசேகரனின் செல்போனில் பல உரையாடல்கள் நிகழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தடயவியல் துறை அலுவலகத்தில் ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், புழல் சிறையில் உள்ள ஞானசேகரனை இன்று மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அழைத்து வந்தனர்.
இந்நிலையில் ஞானசேகரனிடம் துணை இயக்குனர் சோபியா உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. குறிப்பாக செல்போனில் உரையாடல் நடத்தியுள்ள நபர் ஞானசேகரன் தானா என்பதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஞானசேகரனை விதவிதமாக பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரமாக குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஞானசேகரனை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். குரல் மாதிரி பரிசோதனை அடிப்படையில் அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தான தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன