மாமல்லபுரத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலளார் அலெக்சிஸ் சுதாகர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார், கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். சத்யா மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சத்யாவின் தாய் தமிழரசி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ததோடு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சர்ஜ் ஆன பின்னர் தினமும் காலை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்திருந்தது. அதேபோல, நீதிமன்ற விடுமுறை நாட்களில் திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் அவகாசம் கோரி அவரது தாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு மாதத்துக்கு மேலாகியும், நீதிமன்றம் விதித்த ஒரு நிபந்தனையை கூட நிறைவேற்றவில்லை எனக் கூறினார். இதனையடுத்து, சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், உடனடியாக, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். மேலும், தேவைப்படும் பட்சத்தில் அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.