தமிழ்நாடு

திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.

திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
CM Stalin
தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் மேற்கொள்ளும் ஐந்தாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீடுகளை ஈர்க்கப் பயணம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர், முதலில் ஜெர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்குள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் முதலீடுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் செல்லும் அவர், அங்கு கிங்ஸ் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றுகிறார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தையும் திறந்து வைக்க உள்ளார். லண்டனில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். ஒரு வாரப் பயணம் முடிந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

பயணத்தைத் தொடங்குவதற்கு முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களுடன் 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி, பணிகள் தொடங்கிவிட்டன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வளர்ந்துள்ளதா எனக் கேட்பவர்களுக்கு, மத்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே பதிலாக அமைந்துள்ளது. வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது," என்று பெருமிதம் தெரிவித்தார்.

புதிய கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, "புதிய கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், அதையெல்லாம் மிஞ்சி தி.மு.க வெற்றிபெறும்," என்று பதிலளித்தார்.

பீகாரைப் போலத் தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஏன், பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சி பெற வைக்க, தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை," என்று தெரிவித்தார்.