தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறியதா? - அரசின் சாதனைகள் குறித்து தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்!

கடந்த 4.5 ஆண்டுகளில், தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறியதா? - அரசின் சாதனைகள் குறித்து தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்!
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறியதா? - அரசின் சாதனைகள் குறித்து தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்!
கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறைவாக இருந்தபோதும், திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாகவும், வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், தி.மு.க.வின் 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும், மத்திய அரசிடம் 37 திட்டங்களுக்கான அனுமதி நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கியத் திட்டங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்

வேலைவாய்ப்பு: பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கும், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள்மூலம் மூன்று லட்சம் பேருக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி: காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் வருகை 9% உயர்ந்துள்ளது. பள்ளிக்குச் சரியான நேரத்தில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை 98% ஆக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு: விடியல் பயணத் திட்டத்தில் தினமும் சராசரியாக 65 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். 2,200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு, 3,700 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 45,000 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் நலன்: ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் உயர்த்தப்பட்டு, 76 சிறிய விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் நில மீட்பு: சுமார் 7,400 ஏக்கர் கோயில் நிலங்களும், ₹7,658 கோடி மதிப்புள்ள சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி

தமிழ்நாட்டின் கடன்குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அமைச்சர், "தமிழ்நாட்டின் கடன், நிதி ஆணையம் வகுத்துள்ள எல்லைக்கு உள்ளேதான் உள்ளது. கடன்குறித்துப் பேசுபவர்கள், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிபற்றி ஏன் பேசுவதில்லை?" என்று கேள்வி எழுப்பினார். வாங்கும் கடன் எவ்வாறு பொருளாதார மேம்பாட்டிற்காகச் செலவிடப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.