கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளர்.
Director Nelson in Armstrong Murder Case : தமிழ்நாட்டையே உலுக்கிய அரசியல் கொலைகளில் ஒன்று தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், சதீஷ், செல்வராஜ், ஹரிஹரன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் போலீஸ் காவலில் உள்ளனர்.
இதுவரை கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் ஆயுதங்கள், பணம், முன்விரோதம் போன்ற விவகாரங்களில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் அகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்போ செந்திலும் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, மொட்டை கிருஷ்ணனுக்கு லட்சக்கணக்கில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்ததாகவும், அவரை போனில் தொடர்புக்கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால், மோனிஷா, மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் எதுவும் தரவில்லை எனவும் இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மோனிஷா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், மோனிஷாவின் கணவர் இயக்குநர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இயக்குநர் நெல்சனுக்கு முறையாக் சம்மன் அனுப்பப்பட்டு, அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்று தனிப்படை போலீசார் சுமார் 1 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க: GATE தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
மொட்டை கிருஷ்ணனும் இயக்குனர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ச்சியாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் மொட்டை கிருஷ்ணன் செல்போன் தொடர்பு இருந்து வந்ததால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தன்னிடம் எந்த விச்தமான விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும், இது உண்மைக்கு புறம்பானது எனவும் இயக்குநர் நெல்சன் மறுத்துள்ளார்.