தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்…வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுத்த அமைச்சர்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு

 திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்…வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுத்த அமைச்சர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பக்தர்கள் வருகை

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவு திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் அண்ணாமலையார் கோவில் தினமும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் உள்ளூர் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் முறை, கார் பார்க்கிங், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்தவில்லை என்று அதிமுக மற்றும் பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அமைச்சர்கள் ஆய்வு

இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திருக்கோவில் வளாகம், க்யூ வரிசை முறைப்படுத்துதல், ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தரிசன முறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடம் ஹோட்டல், லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் வசதி மற்றும் தரிசனம் உள்ளிட்டவைகளை வாழைப்பழத்தை வழங்கி கேட்டறிந்தார் அமைச்சர் சேகர் பாபு.

ஒருமையில் பேசிய அமைச்சர்

தொடர்ந்து காந்தி சிலை அருகே புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலையை பார்வையிட்டு அவர்கள் பௌர்ணமி தினங்களில் தேரடி வீதி வழியாக சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் நிலை உள்ளது. அதனை பத்திரிகையாளர்கள் படம் எடுத்து செய்தி வெளியிடுகின்றனர். எனவே அதனை சரி செய்வது குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளிடம் விளக்கியபோது அதற்கு அமைச்சர் சேகர்பாபு தொலைபேசியை நோண்டிக்கொண்டு பத்திரிகையாளர்களுக்கு வேறு பொழப்பே இல்லை என கிண்டல் செய்யும் விதமாக ஒருமையில் பேசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.