தமிழ்நாடு

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி
பன்னீர்செல்வம் மற்றும் கைதான பழனி

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி லூர்து மேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள். 2009 ஆம் ஆண்டு லூர்து மேரி தனது கணவர் பழனி மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான போது தனது பழனி அடையாளத்தை மறைத்து தான் பன்னீர்செல்வம் என கொடுத்தார். மேலும் பன்னீர்செல்வம் என்பது அவரது அண்ணன் பெயர்.

இதனை 2009ஆம் ஆண்டு முழுமையாக சோதிக்காத போலீசார் பன்னீர்செல்வம் பெயரிலேயே பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு வழக்கு விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் போலியான பன்னீர் செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து "போலி" பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனையை குறைத்து உத்தரவிட்டது. அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை "டுபாக்கூர்" பன்னீர்செல்வம் நாடினார். ஆனால் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் ஒரிஜினல் பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பன்னீர்செல்வம் குற்றவாளி இல்லை என்பதும் போலீசாருக்கு தெரிந்தது.

நீதிமன்ற ஊழியர் தான் இதனை கண்டுபிடித்தார். 2009ஆம் ஆண்டு கைதான போதும், பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜரானவர் வேறொருவர் என்று நீதிமன்ற ஊழியர் கூறியதை கேட்டதும் போலீசார் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

லூர்து மேரியின் கணவர் பெயர் பழனி. இவரது அண்ணன் பன்னீர்செல்வம். இருவரும் முக ஜாடையில் ஒன்றுபோல் இருப்பதாக தெரியும். இதனால் பழனி எல்லோரிடமும், தான், தான் பன்னீர்செல்வம் என்று கூறியே ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. 

தான் காதலித்து திருமணம் செய்த மனைவி லூர்து மேரியிடம் தன்னுடைய பெயரை பன்னீர்செல்வம் என்றே கூறியுள்ளார். இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போதே பன்னீர்செல்வம் என்றே கொடுத்துள்ளார். பழனி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி உள்ளார். இதனால் நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் அவருக்கு தெரிந்துள்ளது.

மேலும் பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே போலி ஆவணங்களை தயாரித்து டுபாக்கூர் வேலையை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் 15 ஆண்டுகளுக்கு முன் வழக்கை தோண்டி எடுக்க வேண்டிய நிலைக்கு கோடம்பாக்கம் போலீசார் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து பழனி மீது மேலும் ஒரு வழக்கை கோடம்பாக்கம் போலீசார் பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம், ஆவண மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பழனி தலைமறைவாகி விட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பழனியின் புகைப்படத்தை வைத்து போலீசார் அவரை தேடினர்.

ஆனால், கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 3 மாதமாக  தனிப்படை போலீசார் பழனியை தேடி வந்தனர். இந்த நிலையில் பழனியின் செல்போன் எண்ணிற்கு யாரெல்லாம் பேசி உள்ளார்கள்? என்பது தொடர்பான 6 மாத பட்டியலை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது பன்னீர்செல்வத்தை பிடித்தபோது பழனிக்கு ஒரு செல்போன் எண்ணிற்கு இருந்து அடிக்கடி போன் சென்றுள்ளது. அந்த எண்ணை ஆய்வு செய்த போது பழனியோட சகோதரி எண் என்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பழனி மடிப்பாக்கம் பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தது தெரிந்தது.

உடனே, போலீசார் கீழ்க்கட்டளை பகுதியில் காவலாளியாக வேலை செய்து கொண்டிருந்த பழனியை கண்டுபிடித்து கைது செய்தனர். கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு பழனியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல மோசடிகளை பார்த்த போலீசாருக்கே விபூதி அடித்த பழனியை பல தேடலுக்கு கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறைக்குள் தள்ளி உள்ளனர்.