தமிழ்நாடு

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.. குற்றவாளி தீர்ப்பிற்கு முன் தப்பியோட்டம்!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.. குற்றவாளி தீர்ப்பிற்கு முன் தப்பியோட்டம்!
கோவை, செல்வபுரம் பகுதியில் இயங்கி வந்த சந்திரா ஸ்டோர்ஸ் மற்றும் சந்திரா டிரேடர்ஸ் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மகேஷ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று பேர் வழிமறித்து கத்தியால் வெட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை சார்பு நீதிமன்றம் 1-ல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டாவதான செந்தில் குமார் என்பவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த காத்து இருப்பு பகுதியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டார். தீர்ப்புக்காக காத்திருந்த மற்றவர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மதிவாணன் ஏற்கனவே தலைமறைவாக உள்ள நிலையில், மூன்றாவது குற்றவாளியான ரமேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தப்பியோடிய செந்தில் குமாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிப்பதற்கு முன்பாகவே குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் காவல் துறையினரின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தப்பியோடிய குற்றவாளியான செந்தில் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிய குற்றவாளியை விரைந்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.