தமிழ்நாடு

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!
மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!
சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியைக் கல்லால் வீசி உடைத்த மர்ம நபரை, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாநகர அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் என்பவர் நேற்று கோயம்பேடு முதல் பூந்தமல்லி செல்லும் தடம் எண் 16J மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்றார். சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் அவர் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் கல்லை வீசிப் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடினார்.

உடனடியாக ஓட்டுநர் அலெக்சாண்டர் பேருந்தை நிறுத்தி, நடத்துநரின் உதவியுடன் கண்ணாடியை உடைத்த நபரைத் துரத்திப் பிடித்தார். அப்போது அந்த நபர், அவர்களை ஆபாசமாகத் திட்டி தப்ப முயன்றார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அவரைப் பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்திப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் (39) என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரசாந்த் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.