சென்னையில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களின் புழக்கத்தை போலீஸார் கட்டுப்படுத்தியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக மெத்த பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவில் உருவாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸார் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு குழுவை உருவாக்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள் பெரும்பாலும் கிரிண்டர் செயலி (Grindr app) மூலமாக தான் போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும், பத்தில் ஐந்து நபர்கள் இந்த கிரிண்டர் செயலி மூலமாகவே தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஓரின சேர்க்கையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் போதைப்பொருள் ஊடுருவ காரணமாக இருக்கக்கூடிய கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என ஆதாரத்துடன் தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.