தமிழ்நாடு

சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!
4 people from Tamil Nadu die in Chhattisgarh rain floods
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாகச் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் ஜகல்பூரில் சிவில் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவி பவித்ரா (38), மகள்கள் சௌத்தியா (8) மற்றும் சௌமிகா (6) ஆகியோருடன் அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்குச் செல்லக் குடும்பத்தினர் அழைத்ததால், ராஜேஷ்குமார் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சத்தீஸ்கரில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் பயணித்த மாருதி டிசையர் கார் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் உடல்கள்

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், நான்கு பேரின் உடல்களும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு எடுத்து வரப்படுகின்றன. மேலும், நாளை மாலை உடல்கள் சொந்த ஊரை வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தால், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.