தமிழ்நாடு

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.


தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை.. ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
அரசு முறைப் பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (அக்டோபர் 3) பேராவூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், கல்வித் திட்டங்களிலும் ஓரவஞ்சனை செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களில் பாரபட்சம்

தமிழ்நாட்டை வஞ்சிப்பதைத் மத்தியில் உள்ள பாஜக அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:

நமக்கு நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை செய்கிறார்கள். பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கும் நிதி தர மறுக்கிறார்கள். அதே சமயம், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படி அளக்க வேண்டிய சூழல் உள்ளது.

தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தவறு செய்தோருக்கான 'வாஷிங் மெஷின்' பாஜக

தொடர்ந்து, தவறுச் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள பாஜக ஒரு 'வாஷிங் மெஷினாக' செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார். தவறுச் செய்பவர்கள் அதிலிருந்து தப்பிக்கப் பயன்படுத்தும் வாஷிங் மெஷினாகத்தான் பாஜக உள்ளது. அப்படியாகத் தன்னை உத்தமராக்கிக் கொள்ள அதில் குறித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மெண்டை பாஜக கொடுத்து இருக்கிறது. எனவேதான் ஊருக்கு ஊர் மேடை போட்டுக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டு வருகிறார்.

கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடல்

சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தில் மத்திய அரசின் விரைவான நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை மூன்று முறை மிகப் பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டபோதும், உடனே வராத, நிதி தராத, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்து, கும்பமேளா உயிர் பலி ஆகியவை நடக்கும் போதெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் அனுப்புகிறது.

இது எல்லாம் தமிழ்நாட்டின் மீது உள்ள அக்கறை கிடையாது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், இதன் மூலம் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா என பாஜக நினைக்கிறது. இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா விரட்டலாமா என மத்திய அரசு பார்க்கிறது என்று காட்டமாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்றும் அன்றும் இரவு ராமநாதபுரத்தில் தங்கினார்.