தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
Petition filed in High Court seeking cancellation of bail
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் பின்னணி

கடந்த ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து, அவருடைய மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், ஒரு ஆண்டுக்கும் மேல் சிறையில் இருப்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறையில் இருந்த சதீஷ் மற்றும் சிவா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி மனு

இந்நிலையில், சிவா மற்றும் சதீஷுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மனதை செலுத்தாமல் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்பதால், அந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே. ராஜசேகர் முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.