தமிழ்நாடு

Diwali: தீபாவளி கொண்டாட்டம்... புகை மண்டலமாக மாறிய சென்னை... காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது!

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.

Diwali: தீபாவளி கொண்டாட்டம்... புகை மண்டலமாக மாறிய சென்னை... காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது!
சென்னையில் மிகவும் மோசமான காற்றின் தரக் குறியீடு

சென்னை: நேற்றைய தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 14,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து 3 நாட்களில் மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதில் 5,76,358 பேர் பயணித்து இருப்பதாகவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, அரசு சார்பில் சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

இதனிடையே சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்தனர். இரவு நேரத்திலும் மக்கள் வண்ண வண்ணப் பட்டாசுகளை வெடித்ததால், சென்னை மாநகரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக, சென்னையில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காற்றின் தரக்குறியீடு 216ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 262 ஆகவும், ஆலந்தூரில் 258 ஆகவும், அரும்பாக்கம் 248 ஆகவும், வேளச்சேரியில் 224 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் தற்போது தரமான காற்று இல்லை எனவும், காற்றின் மோசமான தரக் குறியீடு காரணமாக சுவாசப் பிரச்சினைகள், இருதய நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகபும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் தயாரான பட்டாசுகள் 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பட்டாசு தயாரிப்பில் முக்கியப் பொருளான பேரியம் நைட்ரேட் மீது உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் சரவெடி பட்டாசு தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்ததால், நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்தாண்டு 30% வரையிலான உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிவகாசியில் ஏறத்தாழ 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் தயாரித்த 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இந்தாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.