மாமூல் தராததால் தங்கும் விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் கந்தன்சாவடி பகுதியில் கௌதம் கிருஷ்ணா ஆண்கள் தங்கும் ஹாஸ்டல் நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது ஹாஸ்டலுக்கு வந்த 4க்கும் மேற்பட்டோர் சீனிவாசலுவை மிரட்டி ரூ. 50 ஆயிரம் தரும்படி மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. பணம் தர மறுத்ததால் வந்தவர்கள் சீனிவாசலுவை அடித்து உதைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சீனிவாசலு தங்களது தமிழ்நாடு ஐடி ஹாஸ்டல் அண்ட் பி ஜி வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் சீதாராமனிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சீதாராமன் தலைமையில் 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசலுவிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாமூல் கேட்டு மிரட்டியவர்கள், 182 வது வார்டு கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமாரின் உதவியாளர் முருகன், அதிமுக அம்மா பேரவை சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் கார்த்திக், அதிமுகவைச் சேர்ந்த சிவராஜ், மணி உள்பட சிலர் தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் 15 ஆம் தேதி கந்தன் சாவடியில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 50 ஆயிரம் கேட்டு மிரட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.