சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்ட இதய நோயாளியான அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இளைஞர் ஒருவர் பெண் வார்டில் புகுந்து அங்கிருந்த 50 வயதுடைய பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே அந்த பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி அளித்த புகாரின் பேரில் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் சலங்கை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
25 வயதான சதீஷ் குமார் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வருவதாகவும் அவரின் அத்தை ஸ்ரீதேவி என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், சதீஷுக்கு மருத்துவமனையில் காவலாளி வேலை வாங்கி தருமாறு கேட்டதன் பேரில் ஸ்ரீதேவி அவரை நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வரவழைத்து பெண்கள் வார்டு பகுதியில் தங்க வைத்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த சதீஷ், பெண்கள் வார்டில் தூங்கி கொண்டிருந்த நோயாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் சதீஷ் உறவினர் ஸ்ரீதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களை கொண்டு வந்த நிலையில் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ள பாலியல் சீண்டல் குற்றத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.