தமிழ்நாடு

பாதுகாப்பு கேட்ட காதல்ஜோடி... பிரித்து அனுப்பிய காவல்துறை? காதலன் தற்கொலை..!

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமண ஜோடியில், பெண்ணை பிரித்து பெற்றோருடன் அனுப்பியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோடியைப் பிரித்து மணமகனின் உயிரைப் பறித்ததா காவல்துறை? செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...

பாதுகாப்பு கேட்ட காதல்ஜோடி...  பிரித்து அனுப்பிய காவல்துறை? காதலன் தற்கொலை..!

மூன்றாண்டு காதல் திருமணத்தில் முடிந்த சந்தோஷத்தை நிலைக்கவிடாமல் செய்த காவல்துறையால், கல்யாண மாலை காயும் முன்னே உயிரை விட்டிருக்கிறார் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர், கோனேரிவட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிர்மல்.

பெங்களூருவில் வேலை செய்து வந்த நிர்மல், தனது வீட்டுப் பகுதியில் உள்ள, கல்லூரியில் படித்து வந்த ஜெயதர்ஷினி என்பவரை 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.

காதலர்கள் செல்போனில் பேசிக் கொண்டும், அவ்வப்போது வெளியிலும் சந்தித்து பழகி வந்துள்ளனர். ஜெயதர்ஷினி தனது கல்லூரி படிப்பை முடித்ததைத் தொடர்ந்து, காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு வந்துள்ளனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெற்றோர்கள் தரப்பில் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயதர்ஷினிக்கு வேறு இடத்தில் வரன் தேடுவதாக வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதனால், காதல்ஜோடி, திருமணம் செய்ய திட்டமிட்டு, கடந்த 17ஆம் தேதி  வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.

இதனால் தனது மகளைக் காணவில்லை என்று ஜெயதர்ஷினியின் தந்தை சங்கர், ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனிடையே வீட்டைவிட்டு பெங்களூரு சென்ற காதல் ஜோடி அங்கு திருமணம் செய்துள்ளனர். அப்போது ஜெயதர்ஷினியை அவர் குடும்பத்தினர், தேடுவதை அறிந்த காதல் திருமண ஜோடி, கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்னர்.

இதையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும், காவல்நிலையம் வரவழைத்து போலீசார்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காதல் திருமண ஜோடி ஒருவரை ஒருவர் பிரியமாட்டோம் என்று உறுதியாக இருந்துள்ளனர். ஆனாலும் ஒரு கட்டத்தில், போலீசார் ஜெயதர்ஷினியை, நிர்மலிடம் இருந்து பிரித்து பெற்றோரிடம் அனுப்பி உள்ளனர்.

மனைவியை பிரித்து அழைத்து சென்றதால் மன உளைச்சலில் தனது வீடு திரும்பிய நிர்மல், புதன்கிழமை இரவு தன்னைத்தானே தூக்கிட்டு கொண்டிருக்கிறார். அவரை மீட்டு உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இளைஞர் நிர்மலின் உயிரிழப்பு குறித்து அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையும் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ரூ.200 செலுத்தினால் சாதி சான்றிதழ்? - போஸ்டரால் வெடித்த பிரளயம்

இந்த நிலையில் போலீசார் ஒருசார்பாக நடந்து கொண்டு ஜெயதர்ஷினியைப்  பிரித்ததால்தான், நிர்மல் உயிரிழந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. தஞ்சம் அடைந்த ஜோடியைப் பிரித்து காவல்துறை உயிரைப் பறித்திருப்பதாகவும் அவர்கள் ஆவேசம் தெரிவித்துள்ளனர்.