தமிழ்நாடு

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை
murder case in coimbatore
கோவை, வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் மோப்ப நாய் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தன் காதலியிடம் நண்பன் பேசி வந்ததால் விஷ ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது.

கோவை மாநகரப் பகுதியில், திருப்பூர்,ஈரோடு,சேலம் போன்ற வெளியூர் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என ஐந்து பேருந்து நிலையங்கள் உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் காலி இடம் உள்ளது. அங்கு இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடைப் பயிற்சி சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று பார்த்த போது கைகள் கட்டிய நிலையில் ஆண் பிணம் இருந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் அங்கு விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அடையாளம் காண உதவிய பச்சை:

கண்டெடுக்கப்பட்ட உடலின் வலது புறம் மார்பிலும், இடது கையிலும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதில் வலது புறம் மார்பில் அபர்ணா என்றும் ஆங்கிலத்திலும் இடது கையில் Xl.Xl.MMVl என்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது இந்த இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்ட காவல்துறையினர், அந்த நபர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்து இருந்தனர்.

இந்நிலையில் அந்த நபர் மதுரை சேர்ந்த சூர்யா என்பதும் சென்னையில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்து உள்ளது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த கார்த்திக், நரேன் கார்த்திக், மாதேஷ் மற்றும் முகமது ரஃபி ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கைதான கார்த்தியின் காதலிக்கும், சூர்யாவுக்கும் இடையே காணொளி அழைப்பில் அடிக்கடி உரையாடல் இருந்து வந்து உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

மதுப்போதையில் நடந்த கொடூர சம்பவம்:

இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆன நரேன் கார்த்திக்,மாதேஷ், முகமது ரபிக் ஆகியோர் பேரூரில் அவர்கள் தங்கி உள்ள வாடகை வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு இவர்கள் போதை ஊசியினை சூர்யாவிற்கு செலுத்தி பின்னர் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்து உள்ளனர். கொலை செய்த போது அவர்கள் போதை மற்றும் மது போதையில் இருந்து உள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை சூர்யா இறந்துவிட்டதை அறிந்ததும் அவரது உடலை வெள்ளிக்கிழமை இரவு வரை வீட்டிலேயே வைத்து உள்ளனர். பின்னர் வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து சூர்யாவின் உடலை வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார்த்திக்,நரேன் கார்த்திக்,மாதேஷ் மற்றும் முகமது ரபிக் ஆகிய நான்கு பேரை போத்தனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.