தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. காவல் நிலையத்திற்கு பறந்த புகார்

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோயிலில் ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. காவல் நிலையத்திற்கு பறந்த புகார்
சமீபகாலமாக இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சுற்றி வருகின்றனர். லைக்குகள் மற்றும் ஃபாலோவர்ஸ்களுக்காக (Followers) சாலைகள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்கள் என எல்லா இடங்களிலும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தினாலும் பலர் ரீல்ஸ் மோகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோயில் என பெயர் பெற்றது. பாரம்பரியமும், பழமையும் மிகுந்த இந்த கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் புனிதமிக்க இடமான சுவாமி நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற அநாகரீகமான செயல்களை கோயிலில் செய்ய வேண்டாம் எனவும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவைகள் எடுக்க தடை விதித்து ஏற்கனவே அமலில் உள்ள நடவடிக்கைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.