தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை
ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,  சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் நாள் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

விசாரணையின் போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டார். ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, குற்றவாளி ஞானசேகரனை குரல் பரிசோதனைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள தடயவியல் துறைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்றது. தடயவியல் துறை துணை இயக்குநர் சோபியா, உதவி இயக்குநர் நளினி நடராஜன், தொழில் நுட்பபிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.