தமிழ்நாடு

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!
ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே கடந்த 2018 ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உள்ளிட்ட காவல் துறையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த சென்னை ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்த உதவி ஆய்வாளர் விஜயரங்கன், இருவரும் மது போதையில் இருந்ததாக கூறி இரு சக்கர வாகனத்தின் சாவியை பறித்தார்.

இதனால் மனமுடைந்த இராதாகிருஷ்ணன், அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். உடன் வந்த சுரேஷ், தன் நண்பன் இராதாகிருஷ்ணனை காப்பாற்றும்படி, உதவி ஆய்வாளர் விஜயராகவனிடம் பலமுறை முறையிட்டுள்ளார்.

ஆனால் உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை காப்பாற்றாமல், அவன் விதி முடிஞ்சது என உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.  இரண்டு நாட்களுக்குப் பின், இராதாகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக உயிரிழந்த ராதாகிருஷ்ணின் தாயார் ரேவதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியதற்காக ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்ய வில்லை என்றும் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் எனக்கூறி, அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மகனை இழந்த ரேவதிக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.