தமிழ்நாடு

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை
வேங்கை வயல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனித கழிவு கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர்.

இச்சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 750 நாட்களாக நீடித்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

அதாவது, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றத்தை செய்துள்ளதாகவும் இவர்கள் மூன்று பேருக்கும் எதிராக ஜனவரி 20-ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும்,  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பராமரிப்பாளரை பணி நீக்கம் செய்ததற்கு பழிவாங்குவதற்காக குடிநீரில் துர்நாற்றம் வருவதாக முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின்னர் முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் நீர்தேக்க தொட்டி மீது ஏறி இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கையை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. 

அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, வேங்கை வயல் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடிய மனு மீதான விசாரணை பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.