15 சதவிகிதம் இறக்குமதி வரி இல்லாமல், 2,507 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்து, அதற்கு நிகராக போலி நகைகளை ஏற்றுமதி செய்துவிட்டு அசல் தங்கத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கு தங்க நகைகள் ஏற்றுமதி செய்வதாக கூறி இறக்கமதி வரி இன்றி பெறப்பட்ட தங்கத்தை சென்னை வியாபாரிகள் 6 பேர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 1,000 கோடி ரூபாய் முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தங்க நகைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி வரிச்சலுகை அளிக்கிறது. அதன் கீழ் பெறப்படும் தங்கத்துக்கு 15 சதவிகிதம் இறக்கமதி வரி கிடையாது. அதன்பேரில் பெறப்படும் தங்கத்தை நகைகளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் வரிச் சலுகையின்பேரில் பெறப்பட்ட தங்கத்தை நகைகளாக மாற்றாமல், அவற்றை அப்படியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 1000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து உள்ளது.
2020 முதல் துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் இப்படி 2,170 கிலோ தங்கத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 941 கோடி ரூபாய் மோசடியை செய்து இருப்பதை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும் சென்னை சுங்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நகை ஏற்றுமதியாளர்களாக தங்களை பதிவு செய்துகொண்டு, ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட இறக்குமதி தங்கத்தில்தான் இத்தகைய மோசடி நடந்து உள்ளது. 15 சதவிகிதம் வரிச்சலுகையின்பேரில் ஆயிரக்கணக்கான கிலோ தங்கக் கட்டிகளை அவர்கள் வாங்கியுள்ளனர்.
அவற்றில் 10% சதவிகிதம் மட்டுமே நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ளவை கள்ளச்சந்தைக்கு திருப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அது தொடர்பாக சென்னை விமான சரக்கு வளாக முதன்மை சுங்க ஆணையர் எம்.மேத்யூ ஜாலி, ஜனவரி 2023 மற்றும் செப்டம்பர் 2024ல் இரண்டு விரிவான விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளார்.
அதில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகள் 22 காரட் என தவறாக அறிவிக்கப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகள் குழுவின் துணையுடன் ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். அதற்காக பெருமளவில் லஞ்சம் கைமாறி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மோசடியில் மும்பை, கொல்கத்தா, ராஜ்கோட் மற்றும் சென்னையில் உள்ள பல நகை உற்பத்தியாளர்கள் இணைந்து, போலி தங்க நகைகளை தயாரித்து ஏற்றுமதி செய்து உள்ளனர். தூய்மையான தங்கக் கட்டிகளை சட்டவிரோதமாக சந்தைகளில் விற்பனை செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆறு ஏற்றுமதியாளர்கள் 2,507 கிலோ தூய தங்கத்தை கொள்முதல் செய்து உள்ளனர். ஆனால் நகைகள் தயாரிக்க 337.02 கிலோவை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். 941 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,170 கிலோவை கள்ள சந்தையில் விற்பனை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 2,612 கிலோ போலி தங்க நகைகள் மோசடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்த மோசடி காரணமாக, சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் அரசு கருவூலகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆறு நகைக்கடைகள் தவிர, பல உற்பத்தியாளர்கள், ஒரு சில சுங்க அதிகாரிகள், சரக்குகளை கையாண்ட தளவாட நிறுவனம், ஒரு உயர் தனியார் துறை வங்கி மற்றும் ஒரு பெரிய பொதுத்துறை அரசு நிறுவனம் ஆகிவற்றுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தங்க மதிப்பீட்டாளர் மூலம் அவற்றை ஆய்வு செய்தபோது 90% பித்தளை அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட போலி தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை எந்திரத்தால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வடிவமைத்து இருந்தனர். போலி நகைகளை ஏற்றுமதி செய்ய 10 கிலோவுக்கு 3 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.