தமிழ்நாடு

ஆர்டிஓ வீட்டில் கத்தி முனையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே ஆர்டிஓ வீட்டில் 60 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்டிஓ வீட்டில் கத்தி முனையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- மேலும் 3 பேர் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி அடுத்துள்ள மண்மலை காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 71). இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவரது மகன் ராம்குமார் மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டுக்குள் 6 பேர் கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ராம் குமாரின் வீட்டிற்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த ராம்குமாரின் மனைவி காந்திமதி, தாய் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகன் அதிரூபன் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்து மர்ம கும்பலொன்று காரில் தப்பியோடியது.

அதனைத் தொடர்ந்து போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். முதல் கட்டமாக கொள்ளையடிக்க பயன்படுத்திய காரின் நம்பர் வைத்து போலீசார் விசாரணையினை தொடங்கினர். பதிவெண் அடிப்படையில் காரின் உரிமையாளரை பிடித்து விசாரணை செய்ததில், காரினை தான் விற்று விட்டதாகவும் தற்போது அந்த கார் வேறொரு புரோக்கர் கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற விசாரசெணையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (32) என்பவர் அந்த காரை விற்பனைக்கு வாங்கியது தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அந்த காரை பழுது பார்க்கும் கடையில் காரை நிறுத்திவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த காரை ஓட்டி வந்த டிரைவர் அதே திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் குமார் (30) என்பதும் தெரிய வந்தது. விசாரணையின் அடிப்படையில் ஆனந்த் குமார் மற்றும் சுபாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கொண்டு நடைப்பெற்ற விசாரணையில் கோவை சேர்ந்த விஜய் என்கிற விஜய் குமார் (40) ரவிக்குமார் (48), அஸ்வின் காந்த் (51) கோவை சேர்ந்த சந்தியா( 29) என 4 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 3 பேர் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்,ஷாருக்கான்,கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்டிஒ வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.