தமிழ்நாடு

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்
கோப்பு படம்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா காமராஜ் சாலை சர்வீஸ் ரோட்டில் நேற்று இரவு அண்ணா சதுக்கம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், காரில் 28 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் தங்க நகைகளை பறிமுதல் செய்து காரில் பயணம் செய்த நான்கு பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.‌ 

விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பிரகாஷ், கரண், கார் ஓட்டுநர் பால் மற்றும் சென்னை சுவுக்கார்பேட்டையை சேர்ந்த அனில் என்பது தெரிய வந்தது. மேலும் பிரகாஷ், கரண் இருவரும் பெங்களூரில் உள்ள பர்புல் ஜூவல்லரி நகை கடையில் மேலாளராக பணியாற்றி வருவதும் அனில் சவுக்கார் பேட்டையில் செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையின் கிளை பிரிவில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பெங்களூரில் செயல்பட்டு வரும் பர்புல் ஜூவல்லரி நகை கடை, சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பேரில் புதிய தங்க ஆபரணங்களை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து தங்க நகைகளை எடுத்து வந்து சென்னையில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்த போது போலீஸ் வாகன சோதனையில் நகைகள் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.‌

குறிப்பாக போலீஸார் பறிமுதல் செய்த 28 கிலோ தங்க நகைகளுக்கு(Gold Seized) உரிய ஆவணங்கள் உள்ள நிலையில் அளவு அதிகமாக தங்க நகைகளை கொண்டு வந்ததால் இது குறித்து வணிகவரித்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துடன் தங்க நகைகளையும் பிடிபட்ட 4 பேரையும் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வணிகவரித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.