போலீசாரின் தொடர் எச்சரிக்கையும் மீறி கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்த மாணவரின் உடலை, மெரினா உயிர் பாதுகாப்பு குழு மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் ஏழு பேர் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் மெரினா கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் மாணவர்களை, போலீசார் கடலில் குளிக்கக் கூடாது எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் போலீசாரின் பேச்சை மீறி சென்னையைச் சேர்ந்த கவியரசன் மற்றும் ஆதி ஆகிய இரண்டு மாணவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி இரண்டு மாணவர்களும் உள்ளே இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் மெரினா உயிர் பாதுகாப்பு குழு வீரர்கள் கடலில் குதித்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடலலையில் சிக்கி மாயமான மாணவன் கவியரசன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். கவியரசனின் உடலை மீட்ட மெரினா உயிர் பாதுகாப்புக் குழுவினர் மெரினா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு மாணவர் ஆதி என்ற மாணவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர் உயிரிழந்தது குறித்து, மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.