Jay Shah Appoinment as ICC President : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா நேற்று முன்தினம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி, ஜெய்ஷா டிசம்பர் 1ம் தேதி முதல் தலைவராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான 35 வயதான ஜெய்ஷா, இளம் வயதில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்து வரும் அவர், டிசம்பர் 1ம் தேதி முதல் உலக கிரிக்கெட்டின் உயரிய பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
முன்னதாக, ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்தபோது, அவரை எதிர்த்து வேறு ஒருவரும் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை. இதனால்தான் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியில் இயக்குநர் குழு உறுப்பினர்கள் என்று தற்போது 16 பேர் உள்ளனர். இவர்கள் ஐசிசியின் முழு நேர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அசோசியேட் நாடுகளின் பிரதிநிதிகள் ஆவார்கள்.
கிரிக்கெட்டில் ஐசிசி கொண்டு வரும் புதிய விதிமுறைகளை மேற்கண்ட 16 பேர் கொண்ட இயக்குநர் குழு உறுப்பினர்கள்தான் இறுதி செய்வார்கள். இதேபோல் ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிவடையும்போது, இந்த 16 பேர் கொண்ட குழுவினர் புதிய தலைவராக தகுதியுள்ளவர்களை பரிந்துரை செய்வார்கள். அதன்பின்பு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
ஆனால் இப்போது போட்டியே இல்லாமல் ஜெய்ஷாவை ஒருமனதாக இயக்குநர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். அதாவது கருத்து கேட்பு கூட்டத்தில் மொத்தம் உள்ள 16 பேரில் 15 பேர் ஜெய்ஷா தலைவராக பொறுப்பேற்க தலையசைத்துள்ளனர். ஆனால் இந்த குழுவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஆதரவு உறுப்பினர் மட்டும் ஜெய்ஷா தலைவராக பதவியேற்க ஆதரவு தெரிவிக்கவும் இல்லை; எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. ஜெய்ஷா தலைவராக பொறுப்பேற்பதற்கு பாகிஸ்தான் அதிப்ருதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்தில் கிட்டத்தட்ட 70% பங்களிப்பு செய்வது பிசிசிஐதான். தனது வலிமையான பொருளாதாரத்தால் உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.
பிசிசிஐக்கு இருக்கும் வளமான பொருளாதாரமே ஜெய்ஷாவை போட்டியின்றி ஐசிசி தலைவர் பொறுப்பில் உட்கார வைத்துள்ளது. ஆகவே இனி உலக கிரிக்கெட்டில் இந்தியா வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகின்றனர் .