ICC International Test Ranking List 2024 : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பட்டியலை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தரவரிசை பட்டியலில் டாப்பில் உள்ளனர். அதவது பவுலிங் தரவரிசையில் அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதுடன், கொத்து கொத்தாக விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா 854 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.
மேலும் வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வினுடன் சேர்ந்து அசத்திய ஜடேஜா 475 புள்ளிகளை பெற்று டெஸ்ட் ஆல்ரவுண்டர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் ஆல்ரவுண்டர் வரிசையில் 370 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். அஸ்வின் தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஜடேஜா ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தரவரிசை பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5வது இடத்திலும், ரிஷப் பண்ட் 6வது இடத்திலும் வீற்றிருக்கின்றனர்.
அதே வேளையில் வங்கதேச தொடரில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10வது இடத்திலும், விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கனே வில்லியம்சன் 852 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.