விளையாட்டு

ICC player of the month: நான்காவது முறையாக ஐசிசி விருது.. சுப்மன் கில் சாதனை!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி ஆகியோர் ஜூலை 2025-க்கான ICC சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ICC player of the month: நான்காவது முறையாக ஐசிசி விருது.. சுப்மன் கில் சாதனை!
India's Shubman Gill and England's Sophia Dunkley Win July's ICC Player of the Month Awards
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஜூலை 2025-க்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நான்கு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அசத்தல்:

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனானது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், கில் ஒட்டுமொத்தமாக 757 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதங்கள் அடங்கும்.

பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 269 மற்றும் 161 ரன்கள் குவித்து, மொத்தம் 430 ரன்கள் எடுத்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பு இதுவாகும்.

இந்த விருதை வென்ற பிறகு பேசிய கில், "ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதைப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டனாக என்னுடைய முதல் டெஸ்ட் தொடரில் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகவும் முக்கியமானது. இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும், எனது சக வீரர்களுக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.

கில் இதற்கு முன்பு ஜனவரி 2023, செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025 ஆகிய மாதங்களில் இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோபியா டன்க்லிக்கு முதல் விருது:

இங்கிலாந்து அணியின் வீராங்கனை சோபியா டன்க்லி, ஜூலை 2025-க்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இந்த விருதை வென்ற பிறகு பேசிய டன்க்லி, "இந்திய அணிக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு இந்த விருதைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக் கோப்பை தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இது எனக்கு ஊக்கமளிக்கும்" என்று தெரிவித்தார்.

Image

இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 126 ரன்கள் எடுத்தார் சோபியா டன்க்லி. முதல் ஒருநாள் போட்டியில் 92 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியாவுக்கு எதிரான நான்கு டி20 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 134.57 ஆக இருந்தது. டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை இவர்தான். ஐசிசி சிறந்த வீராங்கனை விருதினை (மாதந்தோறு வழங்கப்படும் விருது) ஆஷ் கார்ட்னர் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகிய இருவரும் தலா நான்கு முறை இந்த விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதானது, முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் ஐசிசி தேர்ந்தெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.