விளையாட்டு

TNPL 2025: பைனலில் சொதப்பிய அஸ்வின்& கோ.. பட்டத்தை வென்ற திருப்பூர்!

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.

TNPL 2025: பைனலில் சொதப்பிய அஸ்வின்& கோ.. பட்டத்தை வென்ற திருப்பூர்!
iDream Tiruppur Tamizhans Crowned TNPL 2025 Champions
கடந்த ஜூன் 5 ஆம் தேதி தொடங்கிய TNPL 2025 தொடரின் இறுதிப்போட்டியானது திண்டுக்கல்லில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நேற்றைய தினம் நடைப்பெற்றது. நடப்பு சாம்பியனான அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின.

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. என்ன நினைத்து டாஸ் வென்ற பின், பவுலிங்கை அஸ்வின் தேர்வு செய்தாரோ? என திண்டுக்கல் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு அடித்து ஆடினர் திருப்பூர் அணியினர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான துஷார் ரஹேஜா மற்றும் வி.பி.அமித் சத்விக் ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். துஷார் ரஹேஜா 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார். அமித் சத்விக் 34 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் அடித்து மிரட்டினார்.

இதற்கு பின்னாவது திண்டுக்கல் பக்கம் ஆட்டம் சாயுமா? என எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முகமது அலி, சசிதேவ், அனோவன்கர் ஆகியோர் களத்தில் சிறிது நேரமே நின்றாலும் அணியின் ஸ்கோரை உயர்த்த நல்ல பங்களிப்பு வழங்கினர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்து அசத்தியது.

இலக்கு பெரியது என்பதால், ஆரம்பத்தில் இருந்தே ஆடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க வீரரும், கேப்டனுமான அஸ்வின் 1 ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். யாராவது ஒரு வீரராவது நிலைத்து நின்று ஆடுவர் என்று எதிர்ப்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல திண்டுக்கல் அணி பவுலிங்கில் தான் சொதப்பினார்கள் என்றால், பேட்டிங்கில் அதைவிட பயங்கரமாக சொதப்பினார்கள்.

திருப்பூர் அணியினரின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம், 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.

திருப்பூர் அணியின் சார்பில் ரகுபதி சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும், மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளையும், இசக்கிமுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்தத் தொடரின் சிறந்த வீரராக (Player of the Tournament) துஷார் ரஹேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முறையாக கோப்பை வென்றுள்ள திருப்பூர் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.