விளையாட்டு

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
TNPL: DDvsCSG
டி.என்.பி.எல். தொடரின் 9-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று நேற்று (ஜூலை 4) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலாவதாக டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஓபனர்ஸ் ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் கைகோர்த்து அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

திண்டுக்கல் அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்த ஜெகதீசன் 81 (41) ரன்னிலும், பாபா அபராஜித் 67 (44) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய விஜய் சங்கர் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். மேலும், ஸ்வப்னில் சிங் மற்றும் தினேஷ் ராஜ் ஆகியோரும் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து. மேலும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் சசிதரன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. அணியின் ஓப்பனரான அஷ்வின் 21 ரன்களும், சிவம் சிங் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாபா இந்தியஜித் 31 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 42 ரன்கள் எடுத்தார்.

மேலும், அதிரடியாக விளையாடிய விமல் சிக்சர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். மேலும் அவர், 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த இறுதிப்போட்டிக்கான 2வது தகுதிச்சுற்றில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மேலும், திண்டுக்கல் அணி 4-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.