விளையாட்டு

’400 ரன்’ ரெக்கார்ட் யார் முறியடிப்பார்கள்? லாராவின் கணிப்பு இவர்கள் தான்..

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’400 ரன்’ ரெக்கார்ட் யார் முறியடிப்பார்கள்? லாராவின் கணிப்பு இவர்கள் தான்..
Brian Lara Prediction about Break His 400-Run Test Record
பிரையன் லாரா, தனது 400 ரன்கள் என்கிற தனிநபர் அதிகப்பட்ச டெஸ்ட் ஸ்கோரினை யார் முறியடிப்பார்கள்? என கணித்துள்ளது தொடர்பான தகவல் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

வாய்ப்பை நழுவவிட்ட முல்டர்:

சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். முல்டர் நினைத்திருந்தால் ஒருவேளை லாராவின் அதிகப்பட்ச தனிநபர் டெஸ்ட் ஸ்கோரான 400 (நாட்-அவுட்) என்ற சாதனையினை முறியடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டார் முல்டர். இதற்கு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

போட்டியின் நடுவே முல்டரிடம் இதுக்குறித்து கேட்ட போது, ”லாரா ஒரு லெஜெண்ட். அவரது ரெக்கார்ட் அப்படியே இருப்பது தான் நல்லது. மீண்டும் எனக்கு அவரது ரெக்கார்ட்டை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதைப்போல் தான் செய்வேன்” என குறிப்பிட்டது விவாதங்களை ஏற்படுத்தியது.

லாராவின் கணிப்பு யார்?

இந்த நிலையில் தான், லாராவே யார் தனது ரெக்கார்ட்டை ப்ரேக் செய்வார்கள் என கணித்துள்ளார் தெரியுமா? என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் அதர்டன் புதிய தகவலை பாட்காஸ்ட் ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல ஸ்கை ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்டில் பங்கேற்ற மைக்கேல் அதர்டன் தெரிவித்த கருத்து பின்வருமாறு-

“பிரையன் லாராவுடனான ஒரு உரையாடலின் போது நான் அவரிடம் கேட்டேன். உங்கள் சாதனையினை யாராவது முறியடிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று. அதற்கு அவர் தற்போதைய சூழலில் வீரர்கள் விரைவாக ரன்கள் குவிப்பதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் போன்றோர் முறியடிக்கலாம் என நினைக்கிறேன் என்றார் லாரா” என பாட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் அதர்டன்.

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது ஆரம்ப கால கிரிக்கெட்டிலேயே 2 இரட்டை சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஹாரி புரூக் கடந்தாண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 317 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல்:

1. பிரையன் லாரா - மேற்கிந்தியத் தீவுகள் அணி - 400 ரன்கள் (நாட் அவுட்)- 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்.
2. ஹெய்டன் - ஆஸ்திரேலியா அணி- 380 ரன்கள்- 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில்.
3. பிரையன் லாரா- மேற்கிந்தியத் தீவுகள் அணி - 375 ரன்கள்- 1994 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்.
4. ஜெயவர்த்தனே- இலங்கை அணி- 374 ரன்கள்- 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில்.
5. முல்டர்- தென்னாப்பிரிக்கா அணி- 367 ரன்கள்- 2025 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில்.