விளையாட்டு

வங்காளதேசம் - அயர்லாந்து 2வது டெஸ்ட்: திடீர் நிலநடுக்கத்தால் ரசிகர்கள் பீதி!

வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

வங்காளதேசம் - அயர்லாந்து 2வது டெஸ்ட்: திடீர் நிலநடுக்கத்தால் ரசிகர்கள் பீதி!
Earthquake in Dhaka halts Bangladesh vs Ireland 2nd Test
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம், இன்று காலை தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகச் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் தாக்கம்

இன்று காலை சுமார் 10.30 மணியளவில் டாக்காவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது சுமார் 5.5 ரிக்டர் அளவில் பதிவானது. ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக ஆட்டம் சுமார் 5 நிமிடங்கள் வரை தடைபட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், வவீரர்கள், நடுவர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் விரைவாக மைதானத்தை விட்டு வெளியேறி, எல்லைக் கோட்டுக்கு வெளியே தரையில் அமர்ந்து கொண்டனர். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பீதியடைந்து அங்கும் இங்கும் ஓடி பாதுகாப்பான இடங்களைத் தேடிய நிலையில், சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

டாக்காவில் குறைந்தபட்சம் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகத் கூறப்படுகின்றன. மேலும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போட்டியின் நிலை

அயர்லாந்து அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அயர்லாந்து அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.