விளையாட்டு

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
Ashes 2025
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் நாள் ஆட்டத்தின் சுருக்கம்

பெர்த்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் வெறும் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் மற்றும் இங்கிலாந்தின் முன்னிலை

இன்று (நவம்பர் 22) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்து, முதல் இன்னிங்சில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 40 ரன்கள் முன்னிலை கிடைத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவைச் சுருட்டினர்.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் சரிவு
'
40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, முதல் இன்னிங்சை போலவே தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. கிராலி டக் அவுட் ஆனார். டக்கெட் (28 ரன்கள்) மற்றும் போப் (33 ரன்கள்) ஜோடி சேர்ந்து 65 ரன்கள் சேர்த்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த ரூட் (8), ஹாரி ப்ரூக் (0), ஸ்டோக்ஸ் (2), ஸ்மித் (15) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், அட்கின்சன் (37 ரன்கள்) மற்றும் கார்ஸ் (20 ரன்கள்) ஜோடி போராடி 50 ரன்கள் சேர்த்தனர். முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரை அடுத்து, ஆஸ்திரேலியா அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் வெதரால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி அதிரடி காட்டினர். ஜேக் வெதரால்ட் 23 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 83 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 29-ஆம் தேதி தொடங்குகிறது.