அரசியல்

MGR தலைவர்.. அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்: யாரின் வாக்கை குறிவைக்கிறார் விஜய்?

”அரசியலில் ஒரே எதிரி திமுக. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என தன் பேச்சினால் அதிமுக தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

MGR தலைவர்.. அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்: யாரின் வாக்கை குறிவைக்கிறார் விஜய்?
Vijay Praises MGR, Calls AIADMK Cadres ‘Innocent’ at TVK Madurai maanaadu
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்றது.

மதுரை, பாரபத்தி பகுதியில் நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது திமுகவினையும், பாஜகவினையும் கடுமையாக தாக்கி பேசினார்.

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து தற்போது வரை எந்த நிலைப்பாட்டினையும் வெளிப்படையாக அறிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்று மேடையில் எம்.ஜி.ஆரினை புகழ்ந்தும், அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள் என பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

மாநாட்டில் பேசிய விஜய், “சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த மண்ணுக்கு (மதுரை) வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய எண்ணங்கள் தான். ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது” என எம்.ஜி.ஆரை புகழ்ந்தும், எம்.ஜி.ஆர் உடன் மறைந்த கேப்டன் விஜயகாந்தினை ஒப்பிட்டும் பேசியுள்ளார்.

மேலும், ”எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியின் நிலை இன்று என்னவாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியில் இருந்த போது, அவரை மீறி அப்பதவியில் அமர எவராலும் முடியவில்லை. ஆனால், இன்றைய அதிமுகவின் நிலை என்னவாக இருக்கிறது. தற்போது அதிமுக தலைமை பாஜகவுடன் வைத்துள்ள பொருந்தா கூட்டணியால் தொண்டர்கள் குமுறி கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என பேசியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

அரசியலில் என் தலைவர் எம்.ஜி.ஆர் என வெளிப்படையாக அறிவித்தது மட்டுமின்றி, அதிமுக தொண்டர்கள் பொருந்தா கூட்டணியினால் குமுறுகிறார்கள், அவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என பேசி அதிமுகவின் தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் விஜய்.

மேலும் தன் பேச்சில், அரசியலில் நமது ஒரே எதிரி திமுக தான் என விஜய் தெரிவித்துள்ளதால் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் வாக்குவாங்கியை தன் பக்கம் இழுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.